மாற்று! தளக் கொள்கைகள்

 1. நோக்கம்

  தமிழ் இணையத்தளங்கள், அவற்றில் அறிமுகமாகும் எழுத்தாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது. ஒரு சராசரி வாசகருக்கு, இத்தளங்களில் இருந்து தங்கள் ரசனை, விருப்பம், தேவைக்கு ஏற்ப படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது இலகுவாக இல்லை. இதனால், ஒட்டு மொத்தமாக எல்லா படைப்புகளையும் அவர் புறக்கணித்து விடும் விரும்பத்தகாத சாத்தியமும் இருக்கிறது.

  இது போன்ற வாசகர்களுக்கு உதவியாக மாற்று! செயல்படும். இங்கு, தன்னார்வ வாசகர் குழுவால் படித்து விரும்பப்பட்ட படைப்புகள் மட்டுமே பட்டியலிட்டு வழங்கப்படுகின்றன. ஒரு படைப்பு எத்தனை பேரால் பகிரப்பட்டுள்ளது, எத்தனை பேரால் தாரகை மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது, மற்றும் அதைப் பகிர்ந்தவர்கள் யார், அது எந்த வகையைச் சேர்ந்த படைப்பு போன்ற விவரங்கள், ஒரு படைப்பைப் பற்றிய நம்பிக்கையை ஒரு வாசகருக்கு வழங்குகின்றன. இவ்வாறு படைப்புகளைத் தரம் பிரித்து முன்நிறுத்துவதால், அவற்றின் படைப்பாளிகளும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேன்மேலும் தரமான படைப்புகளை வழங்க அவர்கள் உந்தப்படுகிறார்கள்.

  இவ்வாறு, தமிழில் நல்ல படைப்புகளுக்கு ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்குவது, நல்ல படைப்புகளை எதிர்பார்க்கும் வாசகர்களைத் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு நல்ல படைப்பாளிச் சமூகத்தை உருவாக்குவது என்ற இரு உயர்ந்த நோக்கங்களுடன் மாற்று! தளம் இயங்குகிறது.

 2. படைப்புகளைப் பகிர்வதற்கான விதிகள்

  மாற்று! பங்களிப்பாளர்களால் படித்து விரும்பப்பட்ட தமிழ்ப் படைப்புகள், அவர்களால் பகிரப்பட்டு, மாற்று! தளத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இத்தகைய பகிர்வுகள் குறித்து மாற்று! சில விதிகளைக் கடைப்பிடிக்கிறது. அவை:

  அ. எந்தவொரு சிறப்புத்தன்மையுமில்லாத சராசரிப் படைப்புகளை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். சொந்தமாக, படைப்பாளியின் சுய சிந்தனையின் விளைவாக உருவான படைப்புகளுக்கே முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம். ஆகவே, வேறு தளங்களிலிருந்து படியெடுக்கப்பட்ட ஆக்கங்களை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். அவை மிகச்சிறந்த ஆக்கங்களாயிருந்தால் மட்டும், ஒரு விதிவிலக்காக அவற்றைப் பகிரலாம். சிறப்பான, நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கக்கூடிய படைப்புகளுக்கே மாற்று! முன்னுரிமை அளிக்க விரும்புகிறது.

  ஆ. தமிழர் ஒற்றுமைக்கும் பண்பாட்டுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலோ வாசகர்களைப் புண்படுத்தும் வகையிலோ ஒரு தனிநபர் / இனம் / மொழி / சாதி / மதம் / பண்பாடு முதலியவற்றைத் தூற்றி எழுதப்பட்ட படைப்புகளையோ ஆபாச மொழி, தகாத சொற்களைக் கொண்ட படைப்புகளையோ பகிர இயலாது.

  இ. மாற்று! பங்களிப்பாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளின் ஆக்கங்களைப் பகிர இயலாது. இதனால் பகிர்வுகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. பகிர்வுகளை சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் களையப்படுகின்றன. ஏதேனும் காரணங்களால், தனது படைப்புகளை மாற்று! தளத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று ஒரு படைப்பாளி கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், அத்தகைய படைப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

  இந்த விதிகளுக்கு ஒவ்வாத படைப்பு ஏதேனும் தவறுதலாகப் பகிரப்படுமானால் அது சுட்டிக்காட்டப்பட்டு, தேவைப்பட்டால் குழுவினரால் விவாதிக்கப்பட்டு, கருத்தொற்றுமை அடிப்படையில் தளத்திலிருந்து நீக்கப்படும்.

 3. கூட்டுச் செயற்பாடுகள்

  மாற்று! பங்களிப்பாளர்கள் குழு ஒரு தன்னார்வலர்கள் நிறைந்த, ஒற்றுமையான, நட்புடன் செயல்படும் ஒரு குழுவாகும். குழு உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, அவர்களது ஒப்புதலின் அடிப்படையிலேயே தளம் குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவை விவாதிக்கப்பட்டு, அதன் விளைவாக சுமுகமாக தீர்வுகள் காணப்படுகின்றன. இனி வரும் நாட்களில் எங்களுடன் இணைய விரும்பும் தன்னார்வலர்களும், இதே அடிப்படையில் செயலாற்ற விரும்புவார்கள் என்று நம்புகிறோம்.

 4. பயனர் விவரங்கள்

  பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு மாற்று! முன்னுரிமை அளிக்கிறது. மாற்று! தளத்தைப் பயன்படுத்த யாரும் எந்த விதமான சொந்த விவரங்களும் தர வேண்டியதில்லை. மாற்று! தளத்தில் காட்சிப்படுத்துவதற்காக படைப்பாளிகளிடமிருந்தும் எந்தவொரு தகவலும் கேட்கப்படுவதில்லை. ஒரு பங்களிப்பாளராக இணைய விரும்பினால் மட்டுமே உங்களது GMail முகவரி, மற்றும் Google Reader பொதுப்பக்கத்தின் முகவரி, இவையிரண்டும் கேட்கப்படும். வேறெந்தத் தகவலையும் தர வேண்டிய கட்டாயம் கிடையாது.

  எங்கள் தள இணையச் சேவை வழங்குனர்களிடமிருந்து, எங்களுக்குப் பயனர் புள்ளி விவரங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றை நாங்கள் தளப் பயன்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். பயனர்களின் IP முகவரி, இயக்கு தள விவரங்கள் போன்றவற்றை நாங்கள் சேமிப்பதோ, சேகரிப்பதோ, எவருடனும் பகிர்ந்து கொள்வதோ கிடையாது.
எங்கள் கொள்கைகள் குறித்து ஏதேனும் கேள்விகளிருந்தால் எங்களை தனிமடல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி.

மாற்று! பங்களிப்பாளர்கள்.